Menu

Citizens for Justice and Peace

“Thoothukudi firing is another Jallianwala Bagh!” Vikatan

02, Aug 2018 | Aishwarya

தீஸ்தா செடல்வாட் – இந்தியாவில் இயங்கும் மனித உரிமைச் செயற் பாட்டாளர்களில் முக்கியமானவர். 2002 குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டரீதியாக உறுதியாகப் போராடியவர். இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரல் எம்.சி.செடல்வாடின் பேத்தியும்கூட. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக மனித உரிமைப் பாதுகாப்புக் குழுவின் ‘உண்மை கண்டறியும் அறிக்கை’ புத்தக வெளியீட்டுக்காகத் தமிழகம் வந்தவரிடம் பேசினேன்…

“தமிழகத்தில் நிகழும் பொது நிகழ்ச்சிகளில் நீங்கள் அவ்வளவாகப் பங்கெடுக்காதவர். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான நிகழ்வில் மட்டும் குறிப்பாகப் பங்கெடுக்கக் காரணம் என்ன?”

“ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்தின் நூற்றாண்டு நினைவுதினம்,  வரும் ஆண்டில் அனுசரிக்கப்படவிருக்கிறது. அந்தப் படுகொலையை விசாரித்த ஹன்டர் கமிஷனில் இருந்தவர்களில் என் கொள்ளுத்தாத்தா சிமன்லால் செடல்வாடும் ஒருவர். ஜெனரல் டயரை விசாரித்தபோது, `நான் ஜாலியன் வாலாபாக்கில் சுட்டது அங்கே இருக்கும் மக்களை விரட்டுவதற்காக மட்டுமில்லை. இனிமேல் இந்தியர்கள் எவருமே எங்களை எதிர்த்துப் போராடக் கூடாது என்பதற்காகத்தான்’ என்றார். தூத்துக்குடித் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமும் எனக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலைகளைத்தான் நினைவுபடுத்தியது.”

Credit: Bharathiraja

“தொடர்ச்சியான போராட்டங்களால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறதே?”

“மனிதவளத்தை மேம்படுத்துவதும், இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாது காப்பதும், மக்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், வறுமையைப் போக்குவதும், கல்வி மற்றும் மக்களின் சுகாதாரம் சார்ந்த தொடர் செயல்பாடுகளும் மட்டுமே நாட்டின் வளர்ச்சியாக இருக்க முடியும். ஆனால் இந்தியா முதலாளித்துவத்தை வளரவிட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு ஆட்சியில் இருப்பவர்கள் இந்திய ரயில்வே உள்ளிட்ட பொதுச் சொத்துகளைத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர் மீதான வெறுப்பரசியல், வேலைவாய்ப்பின்மை, திரிக்கப்படும் வரலாறு என்பது போன்ற குஜராத் மாடல் வளர்ச்சியும் முன்னேற்றமும்தான் தற்போது தலைநகரத்தில் இருந்து செயல் படுத்தப்படுகிறது.”

“காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அல்லது அதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையில் இதே பாரதிய ஜனதா கட்சி அரசு இருந்தபோதுகூட இவ்வளவு எதிர்ப்பு இருக்கவில்லை. மோடி தலைமையிலான அரசு என்பதனாலேயே இவ்வளவு எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடக்கின்றன என்று கூறப்படுகிறதே?”

“போராட்டங்கள் நடக்கவில்லை என்று கண்மூடித்தனமாக நாம் எப்படிச் சொல்லிவிட முடியும். பொதுமக்களின் நினைவு அவ்வளவு மங்கிவிட்டதா என்ன? மோடி அரசுக்கு முன்பான ஆட்சிக்காலங்களில்தான் அன்னா ஹசாரேயின் போராட்டம் நிகழ்ந்தது. பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் பெட்ரோல் மற்றும் உணவுப்பொருள்களின் விலை அதிகரித்துவிட்டதாக வீதிக்கு வந்து போராடினார்கள். 2014-ம் வருடத்துக்கு முன்பு அப்போதைய குஜராத் முதல்வர் எத்தனை போராட்டங்களில் கலந்துகொண்டார் என்பது கூட அவருக்குத் தெரியும். 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில்தான் காமன்வெல்த் ஊழல் குறித்தும், இந்திய உணவுக்கழகத்தின் கிடங்குகளில் அழுகிக் கிடக்கும் உணவுப்பண்டங்கள் மற்றும் மூளைக்காய்ச்சலால் உத்தரப்பிரதேச மருத்துவமனைகளில் ஏற்பட்ட மரணங்கள் குறித்தும் ஊடகங்கள் தொடர்ந்து ஒளிபரப்பிக் கேள்வி எழுப்பின. மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி எதுவும் பாரபட்சமின்றிக் கேள்வி எழுப்பப்பட வேண்டியதே.”

“ ‘மக்களிடையே என்மீது வெறுப்பை உருவாக்குவது மட்டுமே காங்கிரஸ், இடதுசாரி மற்றும் அவர்களைச் சார்ந்து இயங்கும் அமைப்புகளின் வேலை’ என்று மோடி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தாரே?”

“2002-ம் வருடம் தொடங்கி சென்ற வருடம் வரையிலான பிரதமர் மோடியின் உரைகளைக் கேட்டாலே யார் வெறுப்பு அரசியலைப் பேசிவருகிறார்கள் என்பது தெரியும். அகதிகள் முகாம்கள் வெறுமனே குழந்தைகளை உருவாக்கும் தொழிற்சாலைகள். சமாதிகள் இருக்கும்போது சுடுகாடுகளும் தேவை, பிங்க் புரட்சி உருவாகிவிடுமோ என அச்சப்படுகிறேன்…இப்படி வெறுப்பைக் கிளறும் பேச்சுகள் நிறைந்த நீண்ட பட்டியலை நீங்கள் பார்க்கலாம்.’’

Credit: K. Balaji

“ 2002 கலவரம் தொடர்பாக நீங்கள் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டவர்களில் ஒருவர் தற்போது இந்த நாட்டின் பிரதமர். மற்றொருவரான அமித் ஷா, பாரதிய ஜனதா கட்சியின்  தேசியத் தலைவர். அத்தனை வன்முறைக்கும் காரணமானவர்களாக இருந்தால் எப்படி அவர்களால் இந்த வளர்ச்சியை எட்டியிருக்க முடியும்?”

“குஜராத் கலவர சமயத்தில் குல்பர்க் சொஸைட்டி என்னும் இடத்தில் படுகொலை செய்யப்பட்ட காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஃப்ரிக்காக முதன்முதலில் வழக்கு தொடர்ந்தேன். கலவரத்தைப் பின்னிருந்து இயக்கியதாக 61 நபர்கள் குற்றம் சாட்டப்பட்ட  அந்த வழக்கு தற்போது மேல்முறையீட்டின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. தொடக்கத்தில் குற்றம்சாட்டப்பட்ட 61 பேரில் 59 பேர் மட்டுமே தற்போது இருக்கிறார்கள். குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் அவர்களில் ஒருவர்.

1993 மும்பைக் கலவரத்தில் தொடர்புடையவராக, நீதிபதி பி என்.ஸ்ரீகிருஷ்ணாவால் குற்றம்சாட்டப்பட்ட சிவசேனாவைச் சேர்ந்த மதுக்கர் இரண்டுமுறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 டெல்லியில் நடந்த சீக்கியர்கள் படுகொலைக்குப் பிறகு அதில் தொடர்புடையவர்களாகக் கூறப்பட்ட காங்கிரஸின் லலித் மகேன் உள்ளிட்ட மூவர் அதே வருட இறுதியில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆக, இப்படியான தவறுகள் நடப்பது இது முதன்முறை இல்லை.

மக்கள் இப்படியான பெருங்குற்றங்களை எப்படி எளிதில் மறக்கிறார்கள் என்பது வேதனையானதுதான்.  ஒரு பத்திரிகையாளராக நீங்களும் நானும்தான் இதை, இந்த தேசத்தின் குடிமக்களிடம் கேட்க வேண்டும்.”

“உங்கள் என்.ஜி.ஓ மீதும் நிதிமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளதே?”

“எங்கள் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (Citizens for Justice and Peace)  கூட்டமைப்புக்குக் கிடைத்த பணத்தில் நாங்கள் புத்தகங்களும் ஒயினும் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டோம். கூட்டமைப்பின் வங்கிக்கணக்கிலிருந்து எங்கள் தனிக்கணக்குகளுக்குப் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. குஜராத் கலவரம் தொடர்பாக எங்களது அமைப்பு 68 வழக்குகளைத் தொடுத்தது. அதில் 172 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டார்கள்.அதில் 124 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. எங்கள் அமைப்பின் மீது 2004-ல் வழக்கு தொடர இந்த ஒரு காரணமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. 2010-ம் வருடம் பெஸ்ட் பேக்கரி வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டதும் எங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. பெஸ்ட் பேக்கரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அமித் ஷா. காந்திநகரிலிருந்து எங்களுக்கு எதிராகச் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எல்லாம் 2014-ம் வருட நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தலைநகர் தில்லியிலிருந்து மேலும் வீரியத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களுக்காக நிற்பவர்களுக்கு ஒரே ஆயுதம், ‘நீதி வெல்லும்’ என்ற நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்!”

 

The original interview may be read here.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Go to Top